Friday, February 26, 2010

த‌மிழ் விடு தூது

என் த‌மிழ் ந‌ண்ப‌ ந‌ண்பிக‌ளுக்கு,

வ‌ண‌க்க‌ம்.
ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌வே த‌மிழில் ஏதேனும் எழுத‌ வேண்டும் என்கிற‌ எண்ண‌ம் என‌க்குள் இருந்து கொண்டே இருந்த‌து. 17 வ‌ருட‌ங்க‌ள் த‌மிழ் வ‌ழிப் ப‌யின்ற‌தில் என‌க்கு எப்போதுமே ஒரு பெருமை உண்டு. ஆனால் க‌ல்லூரியில் மெல்ல‌த் தேய்ந்த‌ த‌மிழுட‌னான‌ தொட‌ர்பு ப‌‌ணியிட‌ம் பெய‌ர்ந்த‌தும் முழுதாய் அறுந்த‌து. க‌ணிப்பொறி வாழ்க்கையில் எழுதுவ‌து என்ப‌தே எப்போதோ என்று ஆகிவிட‌, த‌மிழில் எழுதுத‌ல் சாத்திய‌ம‌ற்றுப் போன‌து.

இப்போது அத‌ற்க்கு வாய்ப்பு கிடைத்த‌தில் ம‌கிழ்ச்சி. வித்தியாச‌மான‌ சிந்த‌னைக‌ளை எழுத‌ வேண்டுமென்ற‌ ஆசை. என் ப‌ள்ளி நாட்க‌ளில் எழுதிய‌ க‌தை க‌விதைக‌ளையும் மென்வ‌டிவ‌மாக்கிப் ப‌டைப்ப‌தாய் உத்தேச‌ம். பிள்ளையார் சுழியாய் முத‌லில் ஒரு குறுங்க‌தை.

உங்க‌ள் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் ஒரே ஒரு வ‌ரியாக‌ இருந்த்தாலும் என்னை உற்சாக‌ப் ப‌டுத்த‌வோ அல்ல‌து திருத்திக் கொள்ள‌வோ அது உத‌வுமேயானால் உங்க‌ளுக்கு என் ந‌ன்றிக‌ள் எப்போதும்.

இனி நீங்க‌ளும் என் ப‌திப்புக‌ளும்.

காத‌லாகிக் க‌சிந்து..

'

ப்ச்ச்..

"என்னங்க இது.. restaurant ல.. மத்தவங்க எல்லாம் இருக்காங்க இல்ல?"

ஆனாலும் அதில் ஒரு துளி கோபம் இல்லை. சந்தோஷமும் வெட்கமும் கலந்த இன்னும் பெயர் வைக்கப்படாத ஒரு உணர்வு அது என்பதை நான் மட்டுமே உணர்வேன்.

என்னை விட அதிர்ஷ்ட்டசாலி எவனும் இல்லை என்கிற எண்ணம் திண்ணமாய் இருந்த்த கல்லூரிக் காலம் அது.

"அகிலா"!!

அவ‌ள் பேசப்படும், நினைக்கப்படும், நுகரப்படும் இடமெல்லாம் ஒரு மழைத்துளி விழுந்த்திருந்தால் என் கல்லூரி வளாகம் ஒரு வங்காள விரிகுடாவாகியிருக்கும். அவளின் அளவான பேச்சும் எச்சரிக்கையான வார்த்தைகளும் உறுதியான எதிர்கொள்ளலும் காளையர் பலரின் கண்களுக்கு அவளை சிம்மசொப்பனமாகவே வைத்திருந்தன. சுறா மீன்கள் பல சுற்றி இருக்க அந்த தேவதைக்கு இந்த சுண்டெலியைப் பிடித்துப் போனது எப்படி என்பது, பறக்கும் தட்டுக்கு அடுத்ததாக அறிவியல் ஆராய வேண்டிய இன்னொரு மர்மப் புதிர்.

என்று புலர்ந்தது ,எப்படி மலர்ந்தது எனக்கும் நினைவில்லை அவளுக்கும் நினைவில்லை. ஆனால் அந்தப் ப்ன்னிரண்டு மாதங்கள் எங்கள் இருவர் நினைவிலும் எங்களைத் தவிர வேறொன்றும் இல்லை.
நட்பா? காதலா?. விடை இல்லை. விளக்கம் அறிய அன்று விருப்பமும் இல்லை.
"எது இருந்ததோ அது நன்றாகவே இருந்த்தது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது."

எத்தனை சுகமாய் இருந்தாலும் ஒரு நாள் இல்லை ம‌ற்றொரு நாள் கருவறை விடுத்துப் பிரபஞ்சத்தைத் தொடும் பிஞ்சுக் குழந்தை போல் ஒரு நாள் நாங்களும் உணர்ந்த்தோம் இனியும் இது காதலென்று புரியாவிட்டால் அது காதலுக்கும் நன்றன்று; காதலர்க்கும் நன்றன்று.

காதலென்று உணர்ந்த மாத்திரத்தில் மழை போலப் பொழிந்தன பல கேள்விகள்.
நிச்சயமாய்த் திருமணமா? திருமணம் தான் நிச்சயமா? ஊர் தான் ஏற்குமா? உல‌க‌ம் பார்க்குமா?
சாதி,மதம், அண்ணன், தங்கை, பெற்றோர், சுற்றம், பணம், அந்தஸ்த்து, குலம், நிலம்... காதலுக்கும் கல்யாணத்துக்கும் இடையில் ஒரு எள் அளவுத் தொலைவில் பதினாயிரம் மைல்கற்கள், பல நூறு தடைக்கற்கள். சில நூறு எங்களுக்கும்.

எந்தக் காதலும் தோற்ப்பதில்லை. அதன் வெற்றி சில பல ஜன்மங்கள் ஒத்திப்போடவே படுகிறது.
தன் கற்பு கொள்ளையடிக்கப் பட்டுக்கொண்டிருப்பதை அறிந்தும், வண்டு அமர வசதி செய்து தரும் மலரைப் போல, விதியால் நாங்களும் சிரித்துக் கொண்டே பிரிய வேண்டியிருந்த்தது; பின்னர் நினைத்துக் கொண்டே வாழவும் முடிந்தது.

ஆயின பதினாறு ஆண்டுகள். இரு வேறு பாதைகள் தொலைதூர‌ப் பயணம். தக்காண பீடபூமியாய்த் தேய்ந்தன அந்த‌ இனிமையான‌ ப‌ழைய‌ நினைவுகள்.

கல்யாண நாள் இன்று. மனைவியும் நானும் தனிமையில் ஓர் உணவு விடுதியில். கனவிலும் நினைக்கவில்லை விதி அந்த சூறாவளியைப் பதினாறு ஆண்டுகள் கழித்து என் பக்கத்து மேசைக்குக் கொண்டு வரும் என்று. அதே அகிலா. ஒரு தேய்பிறைக்காலத்து நிலாவாய்.

பார்வைகள் உரசியதும் இதயத்தில் ஒரு பிரெஞ்சுப் புரட்ச்சி. தொண்டையில் ஏதோ ஒன்று அழுத்துவதாய் உணர்வு. இத‌ய‌த்தின் ஒரு சுவ‌ர் பெர்லின் சுவ‌ராய் உடைந்தது. பின் உறைந்த‌து.
மூளை சுறுசுறுப்பாய் பழைய நினைவுக‌ளை தூசு தட்ட, நியூரான்கள் பிண்ணிப் பிணைந்து பல புதிய யோசனைகளைப் பரிசீலிக்க, உதடுகள் வார்த்தைகளைத் தேடிப் பிடிக்க, கணத்தது நெஞ்சம்.

நான்கு கண்கள். நான்கு துளிகள். ஒரே நேர‌த்தில்.

அவளுக்கும் இன்று தான் திருமண நாளோ? பக்கத்தில் யார்?க‌ண‌வ‌னா? கையில் என்ன குழந்தையா? விடை தேட‌ முற்ப‌டும் முன் மூளை ஒரு முடிவுக்கு வந்திருந்தது. தெரியாதது போல‌த் திரும்பிக் கொள்ள‌ க‌ண்க‌ளுக்குக் க‌ட்ட‌ளை இட‌ப்ப‌ட்ட‌து.


"என்ன‌ ஆச்சு திடீர்னு ?" என் ம‌னைவியின் கைக‌ள் என் நெற்றியைத் தொட்ட‌தில் என் நினைவுக‌ள் நிக‌ழ்கால‌த்திற்கு திரும்பிய‌து.
"ஒரு மாரி ஆய்ட்டீங‌க‌?.. உட‌ம்பு கிட‌ம்பு ச‌ரியில்ல‌யா?" .
ஆறு அங்குல‌ இடைவெளியில் தெரிந்த‌ என் ம‌னைவியின் க‌ண்க‌ளில் உண்மையான‌ அக்க‌றையும் ப‌த‌ற்ற‌ம் க‌ல‌ந்த‌ நேச‌மும். சில‌ நொடிக‌ள் என் க‌ண்க‌ள் என் ம‌னைவியின் க‌ண்க‌ளை உற்று நோக்கின‌. ஒரு சில‌ க‌ண‌ங்க‌ள் அவ‌ள் நினைவு சுத்த‌மாய் என்னை விட்டுப் போன‌தை நினைத்தால் என‌க்குள் ஒரு குற்ற‌ உண‌ர்வு. திடீரென்று இந்த‌ க‌ண‌ம் தான் அவ‌ளை முழுமையாய் உள்வாங்கிக் கொண்ட‌தாக‌ தோன்றிற்று. போதி ம‌ர‌த்த‌டியில் அம‌ர்ந்த‌ புத்த‌ன் போல‌ ஒரு திடீர் ஞான‌ம். ப‌தினாறு வ‌ருட‌ங்க‌ள் என‌க்காக‌வே வாழ்ந்த‌ க‌ய‌ல்விழியின் நேச‌ம் எல்லாவ‌ற்றையும் விட‌ப் பெரிய‌தாய் தெரிந்த‌து. அவ‌ளுகென்று இதுவ‌ரை எதுவும் செய்த‌தாய் என‌க்கு நினைவில்லை. அவ‌ள் க‌ண்க‌ளில் தெரிந்த‌ நேச‌ம் ப‌தினாறு ஆண்டுக‌ளும் இல‌வ‌ச‌மாக‌வே கிடைத்த‌தால் அத‌ன் அருமையை நான் உண‌ர‌வில்லை என்றே என‌க்குப் ப‌ட்ட‌து.

அவ‌ள் நெற்றியில் முத்த‌மிட்ட‌ நிமிட‌ம் அவ‌ள் உச்ச‌ந்த‌‌லை என் கண்ணீர்த் துளிக‌ளால் ஈர‌ம் வாங்கிய‌து. அந்த‌க் க‌ணணீரோடு அகிலா நினைவுக‌ளும் க‌ரைந்தது ம‌ட்டும் நிச்ச‌ய‌ம்.

"என்னங்க இது.. restaurant ல.. மத்தவங்க எல்லாம் இருக்காங்க இல்ல?"

ஆனாலும் அதில் ஒரு துளி கோபம் இல்லை. சந்தோஷமும் வெட்கமும் கலந்த இன்னும் பெயர் வைக்கப்படாத ஒரு உணர்வு அது என்பதை நான் மட்டுமே உணர்வேன்.