Thursday, February 9, 2012

போதி மரங்கள்

அப்பா அவசர சிகிச்சைப் பிரிவில். சரியாக எட்டு வருடங்கள் முன்பு நான் typhoid- ல் ஒரு மாதம் படுத்திருந்த அதே மருத்துவமனை.

அப்பாவின் நிலை அறிந்து பெங்களுரிலிருந்து கனத்த இதயமும் கலங்கிய கண்களுமாய் 10 மணி நேரம் பேருந்தில் பயணித்து மருத்துவமனை அடைந்தபோது இரவு மணி 11.
வரவேற்புப் பகுதி தாண்டி, செக்யுரிட்டியைக் கடந்து அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்து, தூங்கிக்கொண்டிருந்த அப்பாவை தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு வெளியே வந்தபோது என்னைக் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியாமல் மூளை தவிப்பதையும் அதை வழிமொழிவதாக இதயம் உரக்கத் துடிப்பதையும் நன்கு உணர முடிந்தது.

எட்டாம் வகுப்புப் படிக்கும்போது சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காலை சுளுக்கிக்கொண்டு பள்ளிக்குச் செல்லும் பாதி வழியில் நடக்க முடியாமல் கண்முட்டத் தண்ணீரோடு நின்றபொழுது, என் 45 கிலோவைத் தூக்கித் தன் இடுப்பில் வைத்துக்கொண்டு மூச்சிரைத்துக் கொண்டே நடந்த என் அப்பாவின் நெற்றியில் அரும்பிய வியர்வையை அழுதுகொண்டே துடைத்து விட்டது இன்னும் நினைவில் இருக்கிறது. அந்த முரட்டு வேகமும், முறுகிய உடலும் இன்று கூனிக்குறுகி ஒரு பச்சை கவுனுக்குள் தஞ்சம் புகுந்து, ஒருக்களித்துப் படுத்திருப்பதைப் பார்க்கையில் தொண்டையில் யாரோ கடப்பாறையை வைத்து அழுத்தியதைப் போல ஒரு உணர்வு.

ஒரு வகையில் பார்த்தால் பள்ளிக்கூடங்களும் குருகுலங்களும் கோவில்களும் மடாலயங்களும் சொல்லித்தர முடியாத விஷயங்களை மருத்துவமனைகள் எளிமையாகப் புரியவைத்து விடுகின்றன. மரணம் என் பக்கத்துப் படுக்கை வரை வந்து சென்றபோது 3 நாட்கள் மட்டுமே பழகிய brain hemorrhage நண்பனின் இழப்பை விட வாழ்க்கையின் நிலையின்மை பற்றியே என் மனது அதிகம் ஆராய்ந்தது. 12 வருடங்களாக 2 நாட்களுக்கு ஒருமுறை kidney dialysis செய்து கொண்டு, சாகும் வரைக்கும் அதுதான் ஒரே வழி என்று தெரிந்தும் வீட்டில் படுத்துக் கிடக்காமல் sales representative ஆக பணிசெய்து கொண்டிருக்கும் 22 வயது நண்பனின் நம்பிக்கையை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது அந்த மருத்துவமனை தான். உள்ளே இருக்கும் ஒரு உயிருக்காக 15 சொந்தங்கள் கண்களை ICU வாசலிலும், கைகளை இதயத்திலும் வைத்துக் கொண்டு இரவும் பகலும் காத்துக் கிடப்பதைப் பார்க்கும்போது உறவுகளின் உன்னதம் புரிகிறது. 70 வயது தாத்தாவைத் தள்ளாடியபடியே கைத்தாங்கலாக கழிவறை அழைத்துச் செல்லும் 65 வயதுப் பாட்டியைப் பார்க்கும்போது, உடல் தாண்டி, உணர்வு தாண்டி உயிரால் ஒன்றுபடுகின்ற மணவாழ்க்கையின் மகத்துவம் புரிகிறது.

பிஞ்சுக் குழந்தையை மடியில் போட்டுக்கொண்டு டாக்டரின் வருகைக்கு மணிக்கணக்காய் காத்துக் கிடக்கும் பெற்றோர்கள்.
Wheel chair- களில் தாயை வைத்துத் தள்ளிக்கொண்டு செல்லும் மகன்கள், மகள்கள்.
மனதெல்லாம் வெறுமை, உடலெல்லாம் வியாதி என உறவுகளால் கைவிடப்பட்டு படுக்கையே கதி என்று கிடக்கும் பெருசுகள்.
எத்தனையோ முகங்கள் ஆனால் எல்லா முகங்களிலும் ஒரே கேள்வி - "எப்போது கிடைக்கும் இதிலிருந்து விடுதலை?"

மருத்துவமனைகள் போதிமரங்கள். மடாலயங்களிலும் ஆசிரமங்களிலும் வாழ்க்கையின் பல கேள்விகளுக்கு வேண்டுமானால் விடை கிடைக்கலாம். ஆனால் மருத்துவமனைகளில் தான் அந்தக் கேள்விகள் பிறக்கின்றன.
பிறந்த குழந்தைக்குப் புற்றுநோய் - பிழை படைப்பிலா? இல்லை படைத்தவனிடத்திலா?
இறந்தும் வாழும் கோமா நோயாளிகள் - வரவில் வைப்பதா? செலவில் சேர்ப்பதா?
ஆனால் ஒன்று மட்டும் உண்மை - ஆயிரம் வருடங்கள் ஆன்மிகம் தரமுடியாத ஞானத்தை ஒரு ஆஸ்பத்திரி இரவு உணர்த்தி விடுகிறது.

மருத்துவமனைகள் போதிமரங்கள்!