Wednesday, October 5, 2011

எல்லாம் வேண்டும் எனக்கு!

எனக்கென்று ஒரு உலகம், எனக்காக ஒரு தோழி,
கடற்கரையில் சிறு வீடு, களங்கமில்லா ஒரு நிலா
எண்ண எண்ணக் கவிதை, எழுத எழுதக் காகிதம்...
விடியும் வரைக்கும் ஒரு விளக்கு.. உறங்கும் வரைக்கும் ஒரு புத்தகம்!
தட்டி எழுப்பத் தாய், தொட்டுத் தடவ நாய்க்குட்டி!
எட்டும் தூரத்தில் எப்போதும் திருக்குறள் , மழை கொட்டும் நேரத்தில் ஒரு கோப்பை தேநீர்!
பிரிந்து போன காதலின் நினைவு, பின் அழுகையே இல்லாமல் ஒரு துளி கண்ணீர் !

எல்லாம் வேண்டும் எனக்கு!.. இவை இல்லாத வாழ்க்கை எதற்கு ?!

Tuesday, January 18, 2011

அக‌மும் புற‌மும்.."ஹ‌லோ"..

"அலோ"...

"அக்கா.. ம‌னோக‌ர் பேச‌ற‌ங்க்கா.. சூர‌த் ல‌ இருந்து".

"ம‌னோக‌ரு.. ந‌ல்லாயிருக்கியா க‌ண்ணு?.. போயி ஒரு மாச‌மாச்சு.. நீ போன் ப‌ண்ண‌லைன்னு உங்க‌ம்மா ஒரு பாடு பொல‌ம்பித் தீத்திருச்சி..."

"இல்ல‌க்கா.. க‌ம்ப்பெனி ல‌ வேல‌ கொஞ்ச‌ம் அதிக‌ம்.. புது வேல‌... அதான்.."

"என்ன‌ வேல‌யோ..போ.. இரு க‌ண்ணு உங்க‌ம்மாவ‌ கூப்ப‌ட‌றேன்.. செட்டியார் க‌டை இன்னிக்கு லீவு தான்.. அய்யாவும் வூட்டுல‌ தான் இருக்குதுன்னு நென‌க்க‌றேன்...... இரு பாக்கறேன்.."
"சாவித்திரிக்கா......... ம‌னோக‌ரு.. போன்ல‌ "

................

"க‌ண்ணு ம‌னோக‌ரு.. எப்புடி க‌ண்ணு இருக்க‌ற‌?.. "

"ந‌ல்லா இருக்க‌ம்மா.. நீங்க‌ எல்லாரும் எப்டி இருக்கீங்க‌?.. அப்பா, செல்வி எல்லாரும்?..."

"எல்லாரும் ந‌ல்லா இருக்கோண்டா.... துணிக்க‌ட‌யில‌ வேல‌ கெட‌ச்சி சூர‌த் போன‌ அண்ண‌ன் போன் ப‌ண்ணுச்சா ப‌ண்ணுச்சானு ஒரு மாசமா செல்வி தான் ராணி அக்கா கிட்ட‌ தென‌மும் கேட்டுட்ட்டே இருந்த்திச்சு.. சாப்பாடெல்லாம் அங்க‌ வ‌ச‌தி யா க‌ண்ணு? ந‌ம்ம‌ ஊரு சாப்பாடு எல்லாம் கெடைக்குதா?"

"ஆமா.. நீ வேணா கூட‌ப்போயி தென‌மும் இட்லி சுட்டுப் போடேன்... வுட்டா பேசிக்கிட்டே இருப்பியே... குடு புள்ள‌ போன‌... "

"ம‌னோக‌ரு... என்ன‌டா... வேல‌ எல்லாம் ஒத்துப் போகுதா?"

"ப‌ர‌வால்ல‌ப்பா.. தீபாவ‌ளி நேர‌ங்க‌ற‌துனால‌ கொஞ்ச‌ம் வேல‌ அதிக‌ம்.. ப‌ர‌வால்ல‌.."

"ம்.. ஒட‌ம்ப‌ பாத்துக்க‌ய்யா... யாரு அந்த‌ப் பாத்தர‌க் க‌ட‌க்கார‌ ப‌ய‌ ம‌ணி கூட‌ தான‌ த‌ங்கியிருக்க‌?.. "

"ஆமாப்பா.. அவ‌ங்கூட‌த்தான்... கிட்ட்த்தட்ட 2 வ‌ருச‌மா இங்க‌ தான் இருக்கான் அவ‌ன்... ப‌க்க‌த்துல‌ ஒரு எலெக்ட்ரிக் க‌ட‌யில‌ வேல‌"

"ம்.. பாத்து இருக்க‌னுண்டா.. அவ‌ன் ஊர்ல‌ இருக்கும்போதே கொஞ்ச‌ம் ஒரு மாரி.. ஊதாரிப்ப‌ய‌... நீ பாட்டுக்கு விட்டேத்தியா இருக்காத‌... காசு ப‌ண‌த்த‌ எல்லாம் வீட்டுல‌ வெச்சா, க‌ரெக்ட்டா பாத்து ப‌த்தர‌மா வ‌க்க‌ணும்.. முடிஞ்ச‌ அளவுக்கு வேற‌ வீடு கீடு பாத்துட்டுப் போற‌க்கு வ‌ழிய‌ப்பாரு சீக்க‌ர‌ம் ... அந்தப் ப‌ய‌லுக‌ளே கொஞ்ச‌ம் சிக்க‌ல் தான்.. ந‌ம்ம‌ கையில‌ நாலு காச‌ப் பாத்தானுக‌ன்னா பொறுக்காது... ந‌ம்ம‌ தான் க‌வ‌ன‌மா இருந்துக்க‌னும்... "

"ச‌ரிப்பா... "

.......
.......
.......
.......


10 நிமிட‌த்துக்கு 41 ரூபாய். ப‌ணத்தைக் கொடுத்த பின் லுங்கியை ம‌டித்துக் க‌ட்டிவிட்டு தெருவில் ந‌ட‌க்கும்போது ம‌ணி சொன்ன‌ வார்த்தைக‌ள் ம‌ணி போல‌ ஒலித்த‌து..

"பைத்திய‌க்கார‌னா டா நீயி?.. வ‌ந்து ஒரு மாச‌மாயும் வேல‌ கெட‌க்க‌ல‌ன்னு வீட்ல‌ சொல்றேங்க‌ற?.. அவ‌ங்க‌ எதோ ப‌ய‌னுக்கு இத்தன‌ வ‌ருச‌ங்க‌ழிச்சு இப்ப‌ தான் வேல கெட‌ச்சிருக்குனு நிம்ம‌தியா இருப்பாங்க‌... இப்போ போயி...

உங்கிட்ட‌ கேட்டனா நா வாட‌க‌ குடு, செல‌வுக் க‌ண‌க்கு பாருன்னு... போயி வேல‌ தேட‌ற‌ வ‌ழிய‌ப்பாப்பானா... இதுல‌ ச‌பதம் உடராரு.. வேல‌ கெட‌ச்சாத்தான் போன் ப‌ண்ணுவேன்னு.. டேய்.. அப்புடி எல்லாம் ரோச‌ம் பாத்தா நாங்க‌ இங்க‌ வ‌ந்த‌ப்போ நாலு மாச‌ம் சோறு த‌ண்ணி கெட‌ச்சிருக்காது...

இந்தா.. புடி இத‌... 50 ரூபா இருக்கு.. போயி மொத‌ல்ல‌ வீட்டுக்கு போன‌ப் போடு.. போயி போன் ப‌ண்ணு.....
போடாங்க‌றேன்....
என்ன‌மோ ஏதோன்னு உக்காந்திட்ருக்கும் உஙக‌ம்மா"..


காளிய‌ப்ப‌ செட்டியார் க‌டையின் க‌ண‌க்கு வ‌ழ‌க்கு தெரிந்த‌ அள‌வுக்கு ம‌னிதர்க‌ளின் ம‌ன‌சு தெரிய‌வில்லை அப்பாவுக்கு ...